Tuesday, November 10, 2009

என் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்


1.

நெருங்கி வா
அல்லது
ஒதுங்கி செல்
வெறும்காற்று நிரம்பிய
இடைவெளிக்குள்
நம் காதலை நிரப்பாதே!

2.

சப்தங்கள் தொலைந்த
ஓர் இரவில்
முத்தங்களால் என்னுயிர்
நிரப்பினாய்.
இப்போது,
அனல் நிரம்பிய அதிகாலைகள்
உயிர்வாங்குகின்றன
உன்
ஞாபக முத்தங்களால்!

3.

கடற்கரை மணலெங்கும்
விரவிக்கிடக்கும்
கால்தட கிறுக்கல்களில்
இன்னமும்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சில்லுகளாய் உடைந்த
நம் காதலின் மிச்சங்கள்.

4.
மனதெங்கும் நுழைந்துவிட்டபின்
புணர்வது ஒன்றும்
பாவமில்லை என்றவள்
நீ.
வெந்நீர்பொழுதொன்றில்
என் நிழலையும்
நிராகரித்துச் சென்றவளும்
நீ.
உயிருள்ள பொம்மைகளானோம்
நானும் என் காதலும்.

5.
நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.

kadaisiyaga


நீ+நான் = முடிவில்லா மனயுத்தம்

நான்+நான் = சுயமழித்து திரிதல்.

கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்

கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்

நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்

ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு

கடைசியாக,

தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்

mazai


1.
உலர்ந்த உதடுகள்
ஜன்னல் கம்பிகளில் பதிய
மழை வெறிக்கிறேன்.
சத்தமின்றி பெய்கின்ற
அடர் நீர்த்துளிகள்
சிறு சிறு குமிழ்களாகி
மெளனமாய் உடைகின்றன.
சப்தங்கள் மரணித்த
மழை
ஊனப் பறவையாய்
துடிதுடித்து அடங்கும்
தருணம்
எனக்கு மட்டும் கேட்கிறது
நிசப்தத்தின் சிரிப்பொலி.


2.
உச்சத்தின் முனகல்களை
அவள் வெளிப்படுத்த
எத்தனித்தபோது
உருவம் பெற்ற நிசப்தம்
அவளது சப்தங்களை
தின்று
என்னை நோக்கி வெறித்தது.
நிர்வாணத்தில் சுகித்திருந்தவனின்
கரம் பற்றி இழுத்துப்போனது.
இருளடைந்த அறைக்குள்
நுழைந்து
என்னை புணர் என்றது.
மறுப்பேதும் உரைக்காமல்
உடல் உதறி
நிசப்தத்திற்குள் நுழைந்துகொண்டேன்
நான்.


3.
அறைக்குள் மெல்ல
நுழைகிறது நிசப்தம்.
அரூப அலையாய்
என்னை சூழ்ந்துகொள்கிறது.
பின்,
பேரானந்தம் தரும்
கரங்களால்
என்னுயிரை திருகி எறிந்து
வெற்றுடல் மேல்
உமிழ்ந்து
ஒன்றும் அறியாத
பாவனையுடன் வெளியேறியது.
இப்போது,
ஓயாத பெரும் இரைச்சல்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நிசப்த கணங்களில்.